குறு, சிறுதொழில் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய, காலதாமதமான பணப்பட்டுவாடாக்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க சென்னை உள்பட நான்கு இடங்களில் தீர்வு மன்றங்களை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு வளர்ச்சி சட்டத்தின் படி சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நான்கு குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் அடிப்படையில் குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய, காலதாமதமான பணப்பட்டுவாடாக்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இந்த தீர்வு மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி குறு, சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருளை வாங்கும் நிறுவனம் உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்யாவிட்டால், அசல் தொகையுடன் ரிசர்வ் வங்கி விதித்துள்ள வட்டியினை போல 3 மடங்கு கூட்டு வட்டியும் சேர்த்து வசூல் செய்ய வழிவகை செய்கிறது.
மேற்படி அரசாணைக்குட்பட்டு, பாக்கி தொகை சேர வேண்டிய குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் உறுதி மொழி பத்திரம், வேண்டுகோள் கடிதங்களுடன் மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத் துறை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை, சென்னை-32 என்ற முகவரியில் உள்ள குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்ற அலுவலகத்தில் முறையிடலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.