சுதந்திரன தின விழாவை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியத் திருநாட்டின் விடுதலைத் திருநாள் விழா முந்தைய 60 ஆண்டுகளாக நாம் கொண்டாடி வரும் வழக்கமான சிறப்புகளோடு இந்த ஆண்டு மேலும் மகத்தான சீர்மிகு விழாவாகக்கொண்டாட வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் சகோதர, சகோதரிகளின் கடமையாகும்.
மத்திய அரசின் கடந்த 4 ஆண்டுகால மக்கள் நல சாதனைகளுக்கு அண்மையில் நாடாளுமன்றம் அளித்த அங்கீகாரமும், அதையொட்டி நாட்டின் மாபெரும் வளர்ச்சிக்கு செயல்படப்போகும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும் இந்த சுதந்திரத் திருநாளில் நமது நாடு பெற்ற வரலாற்று வெற்றிகள்.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்ட, கிராம நிர்வாகிகள் அனைவரும் ஆண்டுதோறும் நடத்தும் முறைப்படி அவரவர் பகுதிகளில் அனைத்து தரப்பான மக்களையும் ஒன்றுதிரட்டி சுதந்திர நாளில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைப்பதோடு, இந்த ஆண்டில் மிக முக்கிய நிகழ்ச்சியாக மத்திய அரசின் மாபெரும் சரித்திரச் சாதனைகளையும், விடுதலைப் போராட்டக் களத்தில் காங்கிரஸ் பேரியக்கம் நடத்திய வீரமிக்க தியாக வரலாற்றையும் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நினைவுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தி பெரிதும் கேட்டுக் கொள்கிறேம்.
அந்த நிகழ்ச்சிகளில் ஏழை, எளிய, நலிந்த பிரிவு மக்களுக்கான நல உதவிகள் மற்றும் சமபந்தியோடு அன்னதானம் வழங்க வேண்டும்'' என்று கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.