தவறான தகவல்களை கூறி மக்களை குழப்புகிறார் ராமதாஸ் : வீரபாண்டி ஆறுமுகம்!
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (09:48 IST)
''உண்மைக்கு மாறான தகவல்களை கூறி, விளம்பரப்படுத்திக் கொண்டு மக்களைக் குழப்பும் ராமதாசா சமூக நீதிக் காவலர்'' என்று வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமூக நீதிக்காக தனது மாணவர் பருவத்தில் இருந்தே போராட்ட களத்தில் இறங்கியவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று வேஷம் போடும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதி போன்று நேரடியாக போராட்டங்களில் இறங்கியதுண்டா? அவரை நம்பி வந்தவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி சுயநலம் தேடிக் கொண்டவர்தான் ராமதாஸ்.
சட்டமன்றத்தையோ, நாடாளுமன்றத்தையோ நானோ எனது வாரிசுகளோ மிதிக்கப்போவதில்லை என்று முழங்கிய ராமதாசின் கொள்கை இன்று என்னவாயிற்று என வன்னியர்கள் கேட்கிறார்கள். இதற்கு ராமதாசின் பதில் என்ன? சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற கொள்கை கொண்ட ராமதாஸ் சமூக நீதிக் காவலரா?
மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்க 1969ம் ஆண்டு சட்டநாதன் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை செயல்படுத்த ஆணையிட்டவர்தான் முதல்வர் கருணாநிதி. கிராமப்புற மாணவர்கள் தொழில் கல்வியில் சேர்வதற்கு முதல்வர் கருணாநிதியால் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
இதை மேலும் 10 விழுக்காடு கூட்டி 25 விடுக்காடாக அறிவித்த அ.இ.அ.தி.மு.க அரசு மறைமுகமாக அதற்கு உயர் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றபோது, ராமதாஸ் ஏன் வாய்பொத்தி முடங்கிக் கிடந்தார்? கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தை அ.இ.அ.தி.மு.க அரசு தேவையில்லை என்று உத்தரவிட்டபோதும் ராமதாஸ் எங்கே ஓடி ஒளிந்தார்?
ராமதாஸ் தன்னையும் தனது சங்கத்தையும் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்வதாக ஒரு காலத்தில் பத்திரிகைகளை குற்றஞ்சாட்டியவர். இப்போது, தினம்தோறும் தனது அறிக்கையும், புகைப்படமும் இடம் பெற வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை கூறி, விளம்பரப்படுத்திக் கொண்டு மக்களைக் குழப்பும் இவரா சமூக நீதிக் காவலர். ஒட்டுமொத்த சமுதாய மக்கள் பாராட்டும் வகையில் செயல்படும் முதல்வர் பற்றி பேச ராமதாசுக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.