கன்னட செம்மொழி அந்தஸ்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு விளக்கம்!
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (18:35 IST)
சென்னை: கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நிபுணர்கள் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதை எதிர்த்து தமிழகத்தில் தொடரப்பட்டு வழக்குக்கும், தமிழக அரசுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நிபுணர்கள் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளதற்கு எதிர்த்து தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
ஆனால், அந்த வழக்கறிஞர் தொடுத்துள்ள வழக்குக்கும் தமிழக அரசுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இந்நிலையில் கன்னட மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கிட தமிழக அரசு குறுக்கே நிற்பதைப் போல திசை திருப்பும் வகையில் ஒரு நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருப்பது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
ஒரு மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்குவது என்பது நிபுணர்கள் அமைப்பு செய்யும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்து அறிவிக்க வேண்டிய முடிவாகும். இதில், தமிழக அரசுக்கெனத் தனியே எவ்வித கருத்தும் இல்லை. எனவே தமிழக அரசு கர்நாடக அரசுக்கிடையே மோதலை உருவாக்கலாம் என்று ஒரு சிலர் காணும் கனவு பலிக்கப் போவதில்லை என தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.