சுதந்திர தினம்: முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (17:35 IST)
சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுவதுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என ரயில்வே ஐ.ஜி. உமாகணபதி சாஸ்திரி கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் நேற்றிரவு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திர தின விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், பயணிகளின் உடமைகள் உள்ளிட்ட பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்து அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு பணியில் ஆயிரம் ரயில்வே காவல்துறையினரும், 2 ஆயிரம் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி ரயில்வே துறைக்கு இதுவரை தீவிரவாத அச்சுறுத்தல் வரவில்லை என்றாலும், பாதுகாப்பு பணிகள் பன்மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை ஐ.ஜி. உமாகணபதி சாஸ்திரி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்