‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், சுரே‌‌ஷ்ராஜ‌ன், அ‌ன்பர‌ச‌ன் ஆ‌கியோ‌ர் மீதான புகாரில் உண்மை இல்லை: கருணாநிதி விளக்கம்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (09:35 IST)
த‌‌மிழக அமைச்சர்கள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், சுரே‌ஷ் ராஜ‌ன், தா.மோ.அ‌ன்பரச‌ன் ஆ‌கியோ‌ர் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்றும், என்.கே.கே.பி.ராஜா மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கருணாநிதி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''கடந்த சில நா‌ட்களாக சில பத்திரிகைகளில் தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி. ராஜா, சுரேஷ்ராஜன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோரைப் பற்றி வந்துள்ள செய்திகள் குறித்து உரிய அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தேன்.

ஒரு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு காவல்துறையினரால் தேடப்படுகிற குமார் என்பவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுடைய பாதுகாப்பில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தி தவறு என்றும், அந்த அமைச்சர் இந்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கு தடையாக இல்லை என்றும் தெளிவாக தெரிகிறது.

சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது தொடரப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்பு வழக்கில் எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், சுரேஷ் ராஜன் இளமைக் காலம் முதல் திராவிட இயக்கத்திலே ஈடுபாடு கொண்டவர் என்ற காரணத்தால் அவர் மீது சாட்டப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை நம்புவதற்கில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது குற்றஞ்சாட்டி, தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தின் ஆணையின்படி காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். இந்த அறிக்கையை பற்றி விசாரித்ததன் பேரில் வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய புகாருக்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று தெளிவாகிறது.

கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது பழனிசாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோரை கடத்திச் சென்றுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர்களே நீதிமன்றத்துக்கு முன்பு ஆஜராகியதுடன், அவர்களின் மகன் சிவபாலன் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது பற்றி நடத்திய விசாரணையில் அமைச்சர் ராஜாவின் தூண்டுதலின் பேரில் அ.இ.அ.தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் வன்முறையைப் பயன்படுத்தி, நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையும் விசாரித்த வரையில் இவர் (எ‌ன்.கே.கே.‌பி.ராஜா) மீதுள்ள புகாருக்கு முகாந்திரம் இருப்பதை அறிந்து, உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரையில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜா விடுவிக்கப்படுகிறார்'' எ‌ன்று கருணா‌நி‌தி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்