ஒகேனக்கல் தமிழகத்துக்கே சொந்தம் என தமிழக அரசு தெளிவபுடுத்த வேண்டும்: பாதுகாப்புகுழு!
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (09:55 IST)
''தமிழக அரசு உறுதியான நிலையை எடுத்து ஒகேனக்கல் தமிழகத்துக்கே சொந்தமான பகுதி என்பதை தெளிவுபடுத்த வேண்டும்'' ஒகேனக்கல் உரிமை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நஞ்சப்பன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒகேனக்கல் கர்நாடகவுக்கே சொந்தம் என்றும், ஒகேனக்கல்லில் வாழும் மக்களுக்கு கர்நாடக அரசு குடும்ப அட்டைகளை வழங்கியிருப்பதாகவும், கர்நாடக வாக்காளர் பட்டியலில் அவர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் தவறான செய்தியை கர்நாடக மின்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியிருக்கிறார்.
மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கும் இடமும் கர்நாடகவுக்கே சொந்தம் என்ற பொய்யான தகவலையும் அவர் கூறியிருக்கிறார்.
ஒகேனக்கல்லில் காவிரியின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள மாறுகொட்டாய், ஜம்போட், ஆலம் பாடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழ் மற்றும் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு கர்நாடக அரசு குடும்ப அட்டைகளையும், வாக்காளர் பட்டியலில் இடமும் வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு வாக்குச் சாவடியும், நியாய விலை கடையும் கர்நாடக மாநிலம் அனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கோபிநத்தத்தில் தான் உள்ளது. அந்த பகுதி கர்நாடக மாநில எல்லையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல், அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், ஒகேனக்கல்லில் உள்ள வாக்குச் சாவடி, நியாய விலை கடையை பயன்படுத்தி வருகின்றனர். பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல்லில் கூத்தப்பாடி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த இடத்துக்கும் கர்நாடக எல்லைக்கும் சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ளது. இந்த அடிப்படை உண்மை தெரியாமல், கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு உறுதியான நிலையை எடுத்து ஒகேனக்கல் தமிழகத்துக்கே சொந்தமான பகுதி என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று நஞ்சப்பன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.