அமைச்சர் ராஜா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்!
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (09:37 IST)
கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் ஆட்களால் கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெருந்துறை விவசாயியும் அவருடைய மனைவியும் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, தனது மனைவி மலர்விழியுடன் மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், ''பெருந்துறை சென்னிமலை சாலையில், ஆனந்த நகருக்குக் கிழக்கே, விவசாய பூமியில் வசிக்கிறோம். இதில், கடலை, சோளம், வாழை, மஞ்சள், கத்தரி ஆகிய பயிர்களையும் 236 தென்னை மரங்களையும் பயிர் செய்து பராமரிக்கிறோம். பெருந்துறையின் மத்தியில் உள்ள நிலத்தை தனக்குத் தருமாறு, அமைச்சர் ராஜா எங்களை பஞ்சாயத்துக்கு அழைத்தார். நாங்கள் அதற்கு மறுத்துவிட்டோம்.
அதன்பின், கடந்த 22ஆம் தேதி அதிகாலை ஒரு கும்பல், எங்கள் மூவரையும் கடத்தி சென்றது. 'அமைச்சர் சொல்வதைக் கேளுங்கள், இல்லை என்றால் கொலை செய்து காவிரியில் வீசிவிடுவோம்' என்று மிரட்டி, பத்திரங்களில் எங்களை கையெழுத்து போட வைத்தனர். கைரேகையும் வாங்கிக் கொண்டனர்.
நான்கு ஐந்து நாட்கள் எங்களை அங்கேயே வைத்திருந்துவிட்டு, கவுந்தப்பாடி என்ற இடத்துக்கு காரில் கொண்டு சென்று எங்களை இறக்கிவிட்டுவிட்டு என் மகனை அவர்களின் காரிலேயே கூட்டிச் சென்றுவிட்டனர்.
எங்கள் வீட்டை இடித்து, 9 பசு, 11 கன்றுகள், 6 எருமை மாடுகளை கொன்று விட்டனர். எங்கள் மீதுள்ள கோபத்தில் அவற்றைக் கொன்றுவிட்டனர். எங்கள் சொத்து மீதுள்ள ஆசையால், அமைச்சர் ராஜாவின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மனித உரிமை ஆணையம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.