ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பணிகள் நடக்கின்றதா? விளக்கம் அளிக்க சரத்குமார் வலியுறுத்தல்!
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (09:27 IST)
''ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதை முதல்வர் கருணாநிதி தெரியப்படுத்த வேண்டும்'' என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பா அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கும் அந்த அரசு தடையாக இருக்கும் என்பது உறுதி.
கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுடன் கலந்து பேசி ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஆனால், அவர் திட்ட செயல்பாடுகள் குறித்த அட்டவணையை மட்டுமே வெளியிட்டார்.
அட்டவணைப்படி பணிகள் நடந்து வருகின்றனவா? இந்த பணிகள் தொடர்பாக ஒரு அலுவலகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. வேறு எந்த பணிகளும் தொடங்கவில்லை என்று கர்நாடக அமைச்சர் கூறுகிறார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
எனவே, தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்று பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுத வேண்டும். நேரில் சென்றும் வலியுறுத்த வேண்டும். இந்த திட்டப் பணிகள் இப்போது எந்த அளவில் உள்ளன என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் மத்திய அரசு மவுனம் சாதித்து, திட்டம் நிறைவேற கர்நாடக அரசு தடையாக இருக்குமானால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக கூட்டணி கட்சிகள் தங்கள் அமைச்சர் பதவிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.