காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன், 6 ஆகஸ்ட் 2008 (17:20 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், பல்வேறு இடங்களில் திருடு போன ரூ.1.21 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசின் தடை உத்தரவை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை உத்தரவை அமல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
தடை உத்தரவை மீறியது தொடர்பாக 4,231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு 142 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 வாகனங்கள் வாங்கப்பட்டு விபத்து, வழிப்பறிகளைத் தடுக்க, விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம், மீட்பு பணிகளைத் அளிக்க 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்துபவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள், ரவுடிகள், திருடர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பெரியய்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.