தமிழகத்தில் 3-வது அணி அமைந்தால் வரவேற்போம்: வரதராஜன்!
புதன், 6 ஆகஸ்ட் 2008 (17:29 IST)
தமிழகத்தில், இணைந்த கைகளுடன் 3-வது அணி அமைந்தால் அதனை வரவேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில், காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் முதல், இரண்டாவது குற்றவாளிகள் என்றும் அவர் விவரித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தமிழகத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவித கூட்டணியும் வைத்துக்கொள்ளாது. இணைந்த கைகளுடன் 3-வது அணி அமைந்தால் அதனை வரவேற்போம்.
தி.மு.க. அரசின் தவறுகளை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. மக்கள் நலனுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து எதிர்க்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தி.மு.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது.
தமிழ் நன்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் மீனவர் நலவாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். தங்கச்சிமடம் என்னுமிடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 13 படகுகளும் இன்னும் திருப்பித்தரப்படவில்லை.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தினமும் தலா ரூ.50 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அத்தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை. இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவதில் இருந்து தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காணவேண்டும். மீனவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று வரதராஜன் கூறினார்.