உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை தமிழகத்துக்கு தலைக்குனிவு: சரத்குமார்!
புதன், 6 ஆகஸ்ட் 2008 (09:34 IST)
சேது சமுத்திர திட்டத்துக்கான பந்த் தொடர்பான அவமதிப்பு வழக்கில் முதல்வர் கருணாநிதிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்ட தலைக்குனிவு’' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மக்களை மதிக்காமல் நிர்வாகத்தை திறம்பட நடத்தாமல் தமிழக அரசு செயல்படுகிறது. அமைச்சர்களிடம் காவல் துறை கைகட்டி நிற்கிறது’ என்று பல்வேறு குற்றச்சட்டுகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி எங்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டிக் காட்டினேன்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிப்பு செய்திருப்பதை, பந்த் நடத்தியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் இருந்து, நீதித் துறையைக் கையாள்வதில் தமிழக அரசு செயலிழந்து நிற்கிறது என்ற உண்மையும் நாங்கள் கூறிய குற்றச்சாட்டில் உள்ள உண்மையும் புரிய வரும்.
'நீங்கள் நீதிமன்றத்துக்கே உத்தரவு பிறப்பீர்களா? இதேபோக்கு நீடித்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி செய்வோம்' என்று நீதிபதிகள் எச்சரித்திருப்பது தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
நீதித்துறையை அவமதித்த செயலின் மூலம் தமிழக அரசு ஜனநாயகத்தையே அவமதித்த குற்றத்தை செய்திருக்கிறது. நீதித்துறைக்கு கட்டுப்பட்டவர்கள் போலவும் அரசால் வேலைக்கு அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஏதோ கவனக் குறைவால் பதிலளிக்க தவறி விட்டார்கள் என்பது போல அவர்களை பதவி நீக்கம் செய்திருப்பதும் தலைமைச் செயலர் மன்னிப்பு கேட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது..
இனிமேலாவது நீதி, நேர்மை, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படையில் ஆட்சி செய்ய முன்வர வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே நமது கலாசாரம்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.