கட்டுப்பாட்டை இழந்த லாரி ஓடும் ரயில் மீது மோதியது: 2 பேர் பலி!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (14:59 IST)
கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது மோதிய பிறகு, ரயில்வே கேட்டை உடைத்துக் கொண்டு அந்த வழியாக வந்த விரைவு ரயில் மீது மோதியது. இதில், லாரி ஓட்டுனரும், பாதசாரியும் இறந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த லாரி, சுந்தராபுரம் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதியது. பின்னர் மூடப்பட்டிருந்த லெவல் கிராசிங் கேட்டை உடைத்துக் கொண்டு அந்த வழியாக வந்த மங்களூர் விரைவு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் மங்களூர் விரைவு ரயிலின் ஒரு பெட்டி பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் ஆனந்தன் (50), பாதசாரி காதர்மொய்தீன் (27) ஆகியோர் பலியாயினர். மேலும் ரயில் பயணிகள் 8 பேரும், லாரியில் இருந்த 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் 8 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பலத்த காயம் அடைந்த 10 பேர் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் மங்களூர் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.