சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு சலுகை காட்டி பணம் வாங்கிய 15 சிறைக்காவலர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் சிறையில் தீவிரவாதி ராஜா உசேன், அலி அப்துல்லா ஆகியோரிடம் இருந்து செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் அலி அப்துல்லா, சிறையில் இருந்து கொண்டு செல்பேசிலேயே சென்னை மற்றும் நெல்லையில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், கைதிகளுக்கு சிறை அதிகாரிகள், சிறை காவலர்கள் சலுகைகள் வழங்குவதாகவும், அதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதும் தெரிய வந்தது.
இந்நிலையில்தான், மத்திய சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் கொடுக்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய சிறைக் காவலர் சாலமன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சாலமன் தற்காலி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, நேற்றிரவு அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் நட்ராஜ் உத்தரவிட்டார்.
மேலும், சிறையில் நுழைவு வாயிலில் இருக்கும் காவலர்கள், கைதிகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதால் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறைக்கு வரும்போது, போதை பொருட்கள், செல்பேசிகளை கடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, துணை சிறைக்காவலர் உள்பட 15 காவலர்கள் வெளியூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.