பதவி விலகச் சொல்ல ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ராஜா!
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (10:36 IST)
ஈரோடு : ''என்னை பதவி விலகச் சொல்ல ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லை'' என்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்று முற்றிலும் தவறானது. இந்த பிரச்சினையில் என் மீது குற்றம் சுமத்தியவர்கள், தூண்டுகோலாக இருந்தவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். எனக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவர்கள் செயல்பட்டுள்ளனர்.
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்று, நான் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரது ஆட்சிக்காலத்தில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது அவர் பதவி விலகவில்லை.
என் மீது யாரோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குற்றம் சாட்டுகிற விவகாரத்திற்காக, என்னை பதவி விலக சொல்வது அர்த்தமற்றது. இதை கூறுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. என் மீது குற்றம் இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்'' என்று அமைச்சர் ராஜா கூறினார்.