தமிழகத்தில் மின்தடை நடைமுறையில் இல்லை: மின்சார வாரியம்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (09:32 IST)
''தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறை என்ற ஒரே ஒருகட்டுப்பாட்டை தவிர இதர மின்தடை தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை'' என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் ஆணையின்படி மின்வினியோகத்தை முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் 21.7.2008 முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி தொழிற்சாலைகளுக்கு வாராந்திர விடுமுறை அறிவித்தும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலங்களில் மின்தடையை நடைமுறைப்படுத்தியும் மின்வினியோகம் மாற்றி அமைக்கப்பட்டது.

அத‌ன் ‌பி‌ன்ன‌ர் 27.7.2008 முதல் ஆங்காங்கே மழை பெய்து நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மின்தடையும் தளர்த்தப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு மின் நிலைமை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே 28.7.2008 அன்று தமிழ்நாடு மின்வாரியச் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறை என்ற ஒரே ஒருகட்டுப்பாட்டை தவிர இதர மின்தடை தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. 2.8.2008 அன்று ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில், மின்துறை அமைச்சர் தமிழகத்தில் 26 ‌விழு‌க்காடு மின்சாரம் திருடப்படுகிறது என்று கூறியதாகவும், அதைத் தடுத்தாலே மின்வெட்டை விலக்கி விடலாம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 26 ‌விழு‌க்காடு அளவிற்கு மின்திருட்டு நடைபெறவில்லை. எனவே மின்துறை அமைச்சர் தமிழகத்தில் 26 ‌விழு‌க்காடு அளவிற்கு மின்திருட்டு நடைபெறுவதாக எப்போதுமே குறிப்பிடவில்லை. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்கம்பிகள் மூலம் மின்சாரம் நீண்டதூரம் செலுத்தப்பட்டு பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும் போது 19.6 ‌விழு‌க்காடு அளவிற்கு மின் இழப்பு ஏற்படுகிறது.

இதுவும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களையும், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் குறைவு. மின்திருட்டு என்ற வகையில் தமிழகத்தில் 2 ‌விழு‌க்காடு அளவிற்கு மட்டும் மின் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை, கடந்த 2 ஆண்டுகளாக மின் உற்பத்தியை பெருக்குவதற்கும், மின் வினியோகத்தை முறைப்படுத்துவதற்கும், மின் இழப்பை தடுப்பதற்கும் உரிய முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது'' என்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்