தீவிரவாதியுடன் தொடர்புடைய 3 பேர் கைது!
சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:48 IST)
சுதந்திரத்தினம் அன்று தமிழகத்தில் சதிவேலையில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி அலி அப்துல்லாவுடன் தொடர்புள்ளதாக கூறி, 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் தொடர்புள்ள மூன்று பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
சுதந்திரத் தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் குண்டுவெடிப்பை நடத்த சதித்திட்டம் திட்டியதாக நெல்லை பேட்டையில் ஜூலை 27ஆம் தேதி அப்துல் ஹப்பார் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான். இவனைத் தொடர்ந்து அன்வர் பாட்ஷா, ஹீரா என்ற செய்யது ஹசிம், அப்துல் காதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை 10 நாள் விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தீவிரவாதி அலி அப்துல்லாவுடன் தொடர்புடையதாக கூறி, முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அமீர் பக்ரி (49), சிறுபான்மை நல அறக்கட்டளை செயலாளர் ஹமீத் அமானி (51), கோவையை சேர்ந்த அப்துல் சையம் (30) ஆகியோரை இன்று சென்னையில் காவல்துறையினர் கைது செய்தனர்.