மீண்டும் முதலமைச்சராக விருப்பம் இல்லை: கருணாநிதி!
சனி, 2 ஆகஸ்ட் 2008 (09:26 IST)
''மீண்டும் முதலமைச்சர் ஆகும் விருப்பம் எனக்கு இல்லை, யார் தமிழகத்தை ஆளுகிற தகுதியை மக்கள் ஆதரவின் மூலம் பெறுகிறார்களோ, அவர்களை ஊக்குவிப்பேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
நகராட்சியாக இருந்த வேலூர், நேற்று மாநகராட்சியாக அறிவிக்கும் விழா முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், வேலூருக்கு மாநகராட்சி தகுதி வேண்டும் என்று பலகாலமாக தொடர்ந்து வந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியாக ஆனால் மட்டும் போதாது. விமான நிலையம் வேண்டும் என்று ஞானசேகரன் கேட்டார். விமான நிலையம் வேண்டும், விமானங்கள் ஏற, இறங்க இடம் வேண்டும்.
அந்த இடத்தை பெறும் நேரத்தில் இடையூறு வரும். அவற்றை களைய வேண்டும். இடையூறு செய்வதற்காகவே சிலர் அரசியல் நடத்துகிறார்கள். அவர்களையெல்லாம் சமாளிக்க வேண்டும். அதற்கு பல சாங்கியங்கள் உள்ளன. அந்த சாங்கியங்கள் நிறைவேறிய பிறகு விரைவில் விமான நிலையம் வரும் என்று கருணாநிதி கூறினார்.
5 முறை முதல்வராக நான் இருந்துவிட்டேன். இனி முதல்வராகும் விருப்பம் எனக்கில்லை. இனிமேல் மீண்டும் அதற்கு அடிமையாக மாட்டேன். அடுத்த முறை நான் முதல்வராவதாக இல்லவே இல்லை. யார் தமிழகத்தை ஆளுகிற தகுதியை மக்கள் ஆதரவின் மூலம் பெறுகிறார்களோ, அவர்களை மேலும் மேலும் ஊக்குவிப்பேன். அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்து சாதனைகளை, அதிசயங்களை உருவாக்குவேன்.
இன்னும் சுதந்திரத்தினுடைய உண்மையான தன்மையை ஏழை மக்கள் அனுபவிக்கவில்லை. அதன் சுவையை முழுமையாக இந்திய மக்கள் பெறவில்லை. அதற்கு யார் யார் உழைக்கிறார்களோ, யார் தியாகம் செய்ய முன்வருகிறார்களோ, அவர்களுக்கு தோழனாக இருந்து உயிருள்ளவரை உழைப்பேன் என்றார் கருணாநிதி.