''அரசியல் காரணம் காட்டி சேது சமுத்திர திட்டத்தை தாமதப்படுத்துவது நல்ல தல்ல'' என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமைகள் குறித்தும் நிலையான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது என்றார்.
சிறிலங்காவில் நடக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங், மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கி.வீரமணி கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அந்நாட்டு அதிபருடன் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வீரமணி கூறினார்.
சேதுசமுத்திர திட்டத்தை 2009ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். இதற்கான குழு ஆய்வு அறிக்கையை சமர்பிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அரசியல் காரணம் காட்டி இந்த பெரிய திட்டத்தை தாமதப் படுத்துவது நல்ல தல்ல. தமிழக மக்களுக்கு பொருளாதார வளம் தரும் இத்திட்டத்தை எந்த காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. திட்டமிட்ட படி இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று கி.வீரமணி கூறினார்.