குண்டு வெடிப்பு எதிரொலி: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
செவ்வாய், 29 ஜூலை 2008 (14:11 IST)
பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பையடுத்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னகரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அனைத்து முக்கியமான ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடைமேடை, பயணிகள் தங்கும் அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமான ரயில் நிலையங்களில் உயரதிகாரிகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
நடைமேடை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சந்தேகப்படும் படி நடமாடுபவர்களின் நடவடிக்கைகள் ரகசிய தொலைக்காட்சி கண்காணிப்பு கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மாம்பலம், தாம்பரம் போன்ற முக்கியமான புறநகர் ரயில்நிலையங்களிலும் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.