அரசு அலுவலரைத் தாக்கியதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் சுரேஷ்ராஜன் டி.விக்களை வழங்கினார்.
அப்போது அமைச்சர் தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் தொடர்பாக இலவச கலர் டி.வி. பொறுப்பை நிர்வகித்து வரும் துணை ஆட்சியர் ஜனார்த்தனனிடம் தி.மு.க.வினர் தகராறு செய்தனர். இதைத் தொடர்ந்து ஜனார்த்தனன், காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் ஜனார்த்தனன் புகார் மனு மீது அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேஷ், தி.மு.க இலக்கிய அணி செயலாளர் தாமரை பாரதி, அமைச்சரின் உதவியாளர் ராமசாமி, தொண்டரணி அமைப்பாளர் ஷேக்தாவூத் ஆகியோர் மீது வடசேரி காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஜாதி பெயரை சொல்லி திட்டுதல் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.