''ராமர் பாலம் விவகாரத்தில் இந்துக்களின் நம்பிக்கையை மீண்டும் மத்திய அரசு சீண்டிப்பார்க்கிறது'' என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சேது சமுத்திர திட்டம் என்ற பெயரால் இந்து விரோதிகள், ராம விரோதிகள் பாலத்தை உடைக்க முயற்சித்து வருகிறார்கள் என்று குற்றம்சாற்றியுள்ள அவர், ராமன் எந்தக் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இந்துக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார் என்று கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்திற்கு 'சேதுராம்' என்று பெயர் மாற்றியாவது நிறைவேற்றுங்கள் என்கிறார் கருணாநிதி. டி.ஆர். பாலுவோ சேது சமுத்திர கப்பல் விரைவில் ஓடும் என்று அறிக்கை விட்டு அறிக்கை மன்னர் ஆகிவிட்டார் என்று கூறியுள்ளார் ராமகோபாலன்.
தற்போது மத்திய அரசோ இந்துக்களின் நம்பிக்கையை மீண்டும் சீண்டிப்பார்க்கிறது என்று தெரிவித்துள்ள அவர், ராமர் பாலம் கட்டினார், அதை அவரே உடைத்து விட்டார் என்பது மத்திய அரசு தற்போதைய கூற்று என்றும் இது புண்ணுக்கு புணுகு பூசும் முயற்சி என்று ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
போலித்தனமான அரசியல்வாதிகள் மத்தியில் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ராமர் பாலம் காக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் மிகத் துணிச்சலாக ஜெயலலிதா பேசிய கருத்து இந்துக்களுக்கு மனநிறைவைத் தருகிறது என்று ராமகோபாலன் பாராட்டியுள்ளார்.
தெய்வம் இகழ்பவர்களை, ராமவிரோதிகளை தேர்தலில் தோல்வியடையச் செய்து அரசியல் முகவரி அற்றவர்களாக ஆக்கிட இந்துக்களை ராமகோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.