தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து குரு மனு!
செவ்வாய், 22 ஜூலை 2008 (16:54 IST)
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக் கோரி வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் முருகேசனை தாக்கிய வழக்கு, வெடிகுண்டு வழக்கு, தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அவதூறாக பேசிய வழக்கில் வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்தது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தன்னை அரசியல் வாங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. இந்த கைதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மாவட்ட அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணை அதிகார துஷ்பிரயோகம் என்றும் 2008ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தான் ஒரு கட்சி அமைப்பில் பேசிய பேச்சின் அடிப்படையில் தன்னை கைது செய்ததற்கான பிண்ணனி அமைந்து இருப்பதால் இது ஒரு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. எனவே இந்த கைதை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.பழனிவேலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.