சிறிலங்கா தலைவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி: தா.பாண்டியன்!
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:11 IST)
தமிழக மீனவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்குப்படுவதையடுத்து, சிறிலங்காவில் இருந்து அந்நாட்டின் அதிபர், பிரதமர், உயரதிகாரிகள் தமிழகம் வந்தால், அவர்களைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அப்பாவி தமிழக மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தும் சிறிலங்கா கடற்படையினரை தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டது.
மீனவர்களைப் பாதுகாக்கத் தவறினால், மத்திய அரசுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்.
மீனவர் பிரச்சினைத் தொடர்பாக 6 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வரும் 30ஆம் தேதி சிறிலங்கா தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்'' என்றார் தா.பாண்டியன்.