ஆகஸ்ட் 31க்குள் இறுதி வாக்காளர் பட்டியல்: நரேஷ் குப்தா!

செவ்வாய், 22 ஜூலை 2008 (09:31 IST)
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்‌‌ட் 31ஆ‌ம் தே‌திக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

ென்னையில் அவ‌ர் செ‌‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌‌ட்டி‌யி‌‌ல், ''புதிதாக மாற்றியமைக்கப்பட்ட சட்டப் பேரவை, மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலை ஆகஸ்‌ட் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆகஸ்‌ட் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 30ஆம் தேதியே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதற்குள் பணிகள் முடியவில்லை என்றால் நான்கைந்து நாள்கள் கூடுதல் அவகாசம் கேட்போம்.

இந்த வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் விவரங்களை வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று சரிபார்ப்பார்கள். அதற்கு அடையாளமாக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர்களைச் சேர்க்கவும், பட்டியலில் உள்ள தவறுகளைச் சரிசெய்யவும் 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பெயர் விடுபட்டவர்கள் "படிவம் 6, 001-ஏ' ஆகியவற்றைப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 51,450 ஆக இருந்தது. தற்போது 144 வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்குத் தயாராக தேவையான கால அவகாசத்தைத் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கும். அந்த அவகாசத்தில் நாங்கள் தேர்தலுக்குத் தயாராகி விடுவோம் என்று நரேஷ் குப்தா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்