விவசாயிகள் பிரச்னை: 27ஆ‌ம் தே‌தி தஞ்சையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய், 22 ஜூலை 2008 (09:26 IST)
விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து, தனது தலைமையில் தஞ்சாவூரில் ஜூலை 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. பயிர்களுக்குத் தேவையான உரத்தை கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. சொட்டுநீர் பாசனத்தை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இதுவரை அரசால் மானியம் தரப்படவில்லை. வங்கிகள் மூலம் விவசாயம் செய்ய எளிதில் கடன் கிடைப்பதில்லை.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அதை நம்பி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், தற்போது அந்தப் பயிர்களைக் காப்பாற்ற போதுமான அளவு தண்ணீர் இல்லை. கர்நாடகத்திடம் வற்புறுத்தி தண்ணீரைப் பெற தமிழக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவிலலை.

கிராமங்களுக்கு ஒரு சில மணி நேரம் கூட மின்சாரம் தருவதில்லை. இதனால், கிராமப்புறங்களில் அடித்தள மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாவது மட்டுமல்ல; அவர்களின் விவசாயத் தொழிலும் பேரிழப்புக்கு ஆளாகி வருகிறது.

இதைக் கண்டித்து எனது தலைமையில் தஞ்சையில் வரும் 27ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் கூ‌றியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்