புதுவையில் நாளை தனியார் பேருந்துகள் ஓடாது

ஞாயிறு, 20 ஜூலை 2008 (12:24 IST)
பேருந்து கட்டணத்தை மாற்றி அமைக்கக் கோரி புதுச்சேரியில் நாளை தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கழகத்தின் தலைவர் பாரதி கண்ணன் இது குறித்து இன்று ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், புதுச்சேரியில் தனியார் பேருந்துகளில் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு கி.மீருக்கு 23 பைசாக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு. கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.16.80 க்கு விற்கப்பட்ட டீசல் தற்போது ரூ.35.46க்கு விற்பனையாகிறது.

பேருந்து கட்டண உயர்வு பற்றி அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. அதனால் பேருந்து உரிமையாளர்கள் நஷ்டத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டி உள்ளது.

கடந்த 15ஆம் தேதியே இதனைக் கண்டித்து வேலை நிறுத்தம் அறிவித்திருந்தோம். ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அந்த வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ஜூலை 20ம் தேதி நள்ளிரவு முதல் 21ஆம் தேதி நள்ளிரவு வரை தனியார் பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்படுகிறது என்று கண்ணன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்