நளினி விடுதலையை அரசு எதிர்க்கும்: உயர் நீதிமன்றத்தில் பதில் மனு!

சனி, 12 ஜூலை 2008 (12:46 IST)
நளினியை முன்கூட்டி விடுதலை செய்வதை அரசு எதிர்க்கும் என த‌‌மிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலதாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நளினியை விடுதலை செய்ய மத்திய,மாநில அரசுகள் கூட்டாக முயல்வதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகளையும் அரசு மறுத்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக வேலூர் சிறையில் உள்ளார் நளினி. அவர் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரிய மனுவை அரசு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கில் தன்னையும் சேர்த்து விசாரிக்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு செய்தார். இவ்வழக்கு நீதிபதி நாகமுத்து முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பதில் மனுவை அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி தாக்கல் செய்தார்.

அ‌ந்த மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ப்தாவது: வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி 14 ஆண்டுகள் சிறை தண்டனையை 9-6-2005 அன்று நிறைவு செய்தார். தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரிய அவரது மனுவை 28-12-06 அன்று ஆலோசனைக்குழு பரிசீலித்தது. நளினியை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டாம் என்பதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது. அதனடிப்படையில் நளினியின் மனுவை அரசு தள்ளுபடி செய்தது. இதற்கான உத்தரவை உள்துறை 31-10-07-ல் பிறப்பித்தது.

மத்திய, மாநில அரசுகள் கூட்டாக நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நளினியை, பிரியங்கா காந்தி 19-3-08ல் சந்தித்தார். இது நளினியை முன்கூட்டி விடுதலை செய்வதற்காக அல்ல.

தி.மு.க, பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான எல்.டி.டி.இ.உடன் நெருக்கமாக இருப்பதாகவும், 1991-ல் எல்.டி.டி.இ.க்கு ஆதரவு கொடுத்ததால் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறியிருப்பதும் சரியல்ல. அப்போது அரசியல் நோக்கத்திற்காக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தீவிரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக இருந்ததற்கு அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசு ஒருபோதும் மிதமாக நடக்காது.

நளினியை முன்கூட்டி விடுதலை செய்வதை அரசு ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. இவ் வழக்கிலும் அரது தனது பதில் மனுவை விரைவில் தாக்கல் செய்யும். சுப்பிரமணியன் சுவாமியை இவ்வழக்கில் சேர்க்க வேண்டியதில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் அரசு கூறியுள்ளது.

இதன் மீது சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர் ராஜகோபால், நளினியின் வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் வாதிட்டனர். சுப்பிரமணியன் சுவாமி மனு மீதான தீர்ப்பை நீதிபதி நாகமுத்து தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்