மத்திய அரசுக்கு எதிராக ம.தி.மு.க. வாக்களிக்கும்: வைகோ!
புதன், 9 ஜூலை 2008 (16:32 IST)
''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக ம.தி.மு.க வாக்களிக்கும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிள்ள அறிக்கையில், இந்தியா- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை ம.தி.மு.க. எதிர்த்து வருகிறது. அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தத்தை இந்தியா செய்யுமானால் இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டு விடும்.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் என்பது நம்முடைய சுயசார்பு நிலையைக் காவு கொடுப்பதோடு, அமெரிக்க விருப்பப்படி ஆட்டி வைக்கும் நிலைமைக்கும் இந்தியா ஆளாகும். எனவே எந்தக்காரணத்தை முன்னிட்டும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா செய்யக் கூடாது. இந்த பிரச்சினையில் இடதுசாரி கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே, பிரதமர் மன்மோகன்சிங், பதவியை ராஜினாமா செய்வதோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். பெரும்பான்மையை இழந்து விட்ட காங்கிரஸ் பதவியில் நீடிக்க முனைவதால் குடியரசுத் தலைவர் உடனடியாக நாடாளுமன்ற மக்களவையைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மக்களவையில் மன்மோகன்சிங் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். தனக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அவர் நிரூபிக்குமாறு குடியரசுத் தலைவர் உடனடியாக தாக்கீது அனுப்ப வேண்டும். ம.தி.மு.க. அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதோடு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய மற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.