''கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி காட்டுவேன்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கே.வி.தங்கபாலு கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.வி.தங்கபாலு இன்று காலை சத்திய மூர்த்திபவனுக்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் கட்சியின் புதிய தலைவராக முறைப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சோனியாகாந்தியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமிழ்நாட்டில் கட்சியை உயர்த்திப் பிடிக்கும் பணியை அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுத்துவோம்.
அனைத்து தலைவர்களையும், தொண்டர்களையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்வேன். கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப் புள்ளி வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி காட்டுவேன்.
தொண்டர்களின் உணர்வுகளையும், மக்களின் எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கட்சியில் அனைவருடன் ஒருங்கிணைந்து கூட்டுத் தலைமையாக செயல்படுவோம் என்று தங்கபாலு கூறினார்.