நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நீடித்த கட்டமைப்பு வசதிகளுக்காக ஜெர்மன் நாட்டு வங்கியின் நிதியுதவி பெற உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜெர்மன் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.534 கோடி நிதியுதவி பெறுவதற்கான ஒப்பந்தம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
மூன்று பகுதிகளாக வழங்கப்பட உள்ள இந்த நிதியுதவி, முதலாவதாக நகர்ப்புற கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடன் உதவியாக வழங்குவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் மேம்பாடு, பாதாளச் சாக்கடைத்திட்டம், சாலை வசதி போன்ற திட்டங்கள் 5 ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
இரண்டாவதாக சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் கடன் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டுவதற்கு ஏதுவாக ரூ.70 கோடிக்கு ஒரு பொது நிதி ஆதார அமைப்புக்கு கடனாக வழங்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் மூலதன சந்தையிலிருந்து கடன் பத்திர வெளியீட்டின் மூலமாக ரூ.110 கோடி வரை நிதி திரட்ட முடியும்.
இந்த நிதி மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை நிறைவேற்ற முடியும். மீதமுள்ள ரூ.20 கோடி உள்ளாட்சி அமைப்புகள் முதலீடு செய்ய வேண்டும். இதனுடைய வட்டி விகிதம் ரூ.0.75 ஆகும். இதனை திரும்பச் செலுத்தும் காலம், 10 ஆண்டுகள் சலுகைக் காலம் உட்பட மொத்தம் 40 ஆண்டுகள் ஆகும்.
மூன்றாவதாக ரூ.14 கோடி தொழில் நுட்ப திறனை பெருக்கிக் கொள்வதற்காக மானியமாக வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவிக்கான ஒப்பந்தங்கள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையெழுத்தானது.