அரியலூரில் இந்தாண்டு பொறியியல் கல்லூரி செயல்படும்: ஆ.ராசா!
செவ்வாய், 8 ஜூலை 2008 (11:15 IST)
''அரியலூரில் இந்தாண்டு முதலே பொறியியல் கல்லூரி தொடங்கி செயல்படும்'' என்று மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.
அரியலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்க உள்ள பொறியியல் கல்லூரிக்கான இடம் காவனூரில் 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டடங்கள் கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக அரியலூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை களில் பொறியியல் வகுப்பு இந்த ஆண்டு முதல் நடத்தப்படும்.
நடப்பு கல்வி ஆண்டு முதல் சிவில், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் தலா 60 மாணவர்கள் வீதம் 240 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கி வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பேராசிரியர், 2 உதவி பேராசிரியர்கள் உள்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்று அமைச்சர் ராஜா கூறினார்.
அரியலூரில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரி தொடங்கி நடை பெறும் என்று தமிழக அரசு பட்ஜெட் கூட்ட தொடரில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.