நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளால் முடியவில்லையென்றால், ஆட்சியை விட்டு வெளியேறுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்கள் உட்பட இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் மட்டும் ஏற்பட காரணம் என்ன என்பது தெரியவில்லை.
மத்திய அரசோ, அணு சக்தி ஒப்பந்தம் குறித்து இடது சாரிகளை எப்படி சமாளிப்பது? சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை எப்படிப் பெறுவது?மக்களவைத் தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது குறித்த ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றது.
விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை ஏற்றம், ஏறுமுகத்தில் பணவீக்கம்' ஆகிய பாதகச் செயல்களுக்கு முக்கிய காரணமான சிதம்பரமோ, நாட்டு மக்களுக்கு பாதகம் செய்வோரை ஏற்கக் கூடாது என்று வியாக்யானம் செய்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே, மத்திய அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிலேயே மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இதன் விளைவாக, மக்கள் நலப் பணிகள், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு மட்டு மல்லாமல், நாட்டில் உணவுப் பஞ்சம், நிதி நெருக்கடி ஆகியவை ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.
ஏனென்றால், இதுபோன்ற விலைவாசி உயர்வை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை, உரத்தட்டுப் பாட்டை, உப்புத்தட்டுப்பாட்டை தமிழக மக்கள் இதுவரை கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.
அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக தெரியவில்லை. இதன் விளைவாக, காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.
தற்போது நிலவும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய காங்கிரஸ் மற்றும் மாநில தி.மு.க. அரசுகளால் முடியவில்லையென்றால், ஆட்சியை விட்டு வெளியேறுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.