லாரிகள் வேலைநிறுத்தம்: ஈரோடு, திருப்பூரில் ரூ.25 கோடி வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு!
புதன், 2 ஜூலை 2008 (11:43 IST)
நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் ரூ.25 கோடி வர்த்தகம் பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் 25,000 லாரிகளுக்கு மேல் அயல்மாநிலங்களுக்கு ஜவுளிகள் ஏற்றிசெல்வது, விவசாய பொருட்களை ஏற்றிசெல்வது அதேபோல் அயல்மாநிலங்களில் இருந்து மஞ்சள், பருத்தி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக ஈரோடு மாவட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகள் கர்நாடகா மாநிலத்திற்கு வாழை, மல்லிகை பூ உள்ளிட்டவைகள் ஏற்றிசெல்வது வழக்கம். அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கரும்பு, மக்காசோளம் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாட்டிற்கு ஏற்றி வருவர்.
இதேபோல் திருப்பூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகள் அயல்மாநிலங்களுக்கு பனியன், ஜட்டி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்வார்கள். அதேபோல் பல்லடம் , பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரிக்கோழிகள் ஏற்றிக்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செலவர். ஈரோடு, திருப்பூர் பகுதிகளின் தொழில்களுக்கு லாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் ரூ.25 கோடி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.