செம்மொழி ஆய்வு மையத்திற்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கினார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழ் மொழி செம்மொழியானதால் ஆண்டு தோறும் தேசிய அளவில் சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.5 லட்சத்துடன் தொல்காப்பியர் விருது வழங்கப்படும் என்று கூறிய அவர், அயல் நாட்டு தமிழ் அறிஞர் ஒருவருக்கும், அயல் நாட்டில் வாழும் இந்திய தமிழ் அறிஞர் ஒருவருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் இரண்டு குறள்பீட விருது வழங்கப்படும் என்றார்.
மேலும் தலா ரூ.1 லட்சம் வீதம் இளம் தமிழ் அறிஞர்கள் 5 பேருக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்த கருணாநிதி, இந்த செம்மொழி விருதுகளை தமிழ் அறிஞர்களுக்கு குடியரசு தலைவர் வழங்குவார் என்றார்.
முதன் முதலாக 2005-06, 2006-07, 2007-08 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் விருதுகள் வழங்கப்படும். இதில் 3 தொல்காப்பியர் விருது, 6 குறள் பீட வருது, இளம் தமிழ் அறிஞர்களுக்கான 15 விருதுகள் ஆகியவை வழங்கப்படும். 3 ஆண்டுகள் வாழாவிருந்து விட்டதால் வாளாக மாறி இந்த விருதுகளை வழங்க துரிதமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம் என்று கூறினார் கருணாநிதி.
மேலும் அவர் கூறுகையில், இந்த விருதுகளை தேர்வு செய்ய குழந்தைசாமி, ஜெயகாந்தன், மா.நன்னன், ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற அவர், எனது சொந்த பணத்தில் இருந்து 1 கோடி ரூபாயை இந்த ஆய்வு மையத்துக்கு வழங்குகிறேன் என்றும் அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகை இந்த தமிழ் மையத்தில் வரலாற்று பயன்மிக்க கல்வெட்டை ஆய்வு செய்பவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும். அவருக்கு விருதும், பொற்கிழியும் கிடைக்கும் என்றும் இது தமிழ் ஆய்வு மையம் ஆண்டுதோறும் வழங்கும் ஏனைய விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படும் என்றார் கருணாநிதி.