''பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் அரசு மூலம் 65 விழுக்காடு இடங்களும், தனியார் கல்லூரிகள் மூலம் 35 விழுக்காடு இடங்களும் நிரப்பப்படும். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது.
தமிழ் நாட்டில் 278 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,11,124 இடங்கள் இருக்கின்றன. இதில் 69,731 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடம் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
165 கல்லூரிகள் 65 விழுக்காடு இடத்தை ஒதுக்குவதாக எழுதி கொடுத்துள்ளன. 15 கல்லூரிகள் 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு இடங்களை அரசுக்கு அளிப்பதாக கூறியுள்ளன. இதுதவிர இந்தாண்டு கூடுதலாக 25 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே இருப்பதை விட 10,000 இடங்கள் அதிகமாக கிடைக்கும். இதனால் விண்ணப்பம் செய்த மாணவர்கள் அனை வருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொறியியல் படிப்புக்காக இந்த ஆண்டு 1,27,299 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில் 1,23,875 விண்ணப்பங்கள் தகுதி உள்ளவையாகும்.
இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்தார்.