தமிழ் வழிக்கல்வியில் பயின்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ, மாணவியருக்கு ஊக்கப்பரிசாகக் கணினிகள் அளிக்கப்படும் என இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தமிழ் வழி பயின்று அதிக மதிப்பெண்கள் எய்தியதில் முதல் 1000 இடங்களைப் பெற்ற 1100 மாணவ, மாணவியருக்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் ஊக்கப் பரிசாக மடிக்கணினிகள் (லேப்-டாப்) வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவித்த மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களைப் பெற்றுச் சாதனைகள் படைத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மாநில அளவில் முதலிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை செயின்ட் இக்னீசியஸ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர்.ராம் அம்பிகைக்கு ரூ.7,500 வழங்கப்பட்டது.
2-ம் இடம் பெற்றுள்ள 4 பேருக்கு தலா ரூ.6000 வழங்கப்பட்டது. 3-வது இடம் பெற்றுள்ள 8 பேருக்கு தலா ரூ.5,000 என மொத்தம் 13 மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கிப் பாராட்டினார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.