10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு 26 ஆம் தேதி ஹால் டிக்கெட்!
செவ்வாய், 24 ஜூன் 2008 (09:40 IST)
''10ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தேர்வு அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர்கள் வெளியிடப்படும் விநியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்'' என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகள் இந்த ஆண்டிலேயே கல்வியைத்தொடர வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு துணைத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 90,300 பேர்கள் எழுதினார்கள்.
சென்னையில் 10 மையங்களில் தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி பழனிச்சாமி பல தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய சிறப்பு துணைத்தேர்வுகள் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை நடக்கிறது. அதற்கான அனுமதி சீட்டுகள் (ஹால் டிக்கெட்) 26, 27 தேதிகளில் வழங்கப்பட உள்ளது. பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே அனுமதி சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
2008ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அதற்கு முந்தைய மெட்ரிக் தேர்வுகளில் தோல்வியுற்று தனித்தேர்வர்களாக எழுத தேர்வுத்துறைக்கு நேரடியாக விண்ணப்பித்தவர்கள் அனுமதி சீட்டுகளை 26, 27 தேதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர்கள் வெளியிடப்படும் விநியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.