மாணவர்களிடம் கட்டாய நன்கொடை: பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை!
வெள்ளி, 20 ஜூன் 2008 (09:48 IST)
''மாணவ- மாணவிகளிடம் கட்டாய நன்கொடை வசூலிக்கும் அரசு பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் நிதிக்காக ஒரு ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். அதுவும் மாணவர்களிடம் நேரடியாக வாங்கக்கூடாது. பெற்றோர்களிடம் தான் கேட்டு வாங்க வேண்டும். பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் மாணவ -மாணவிகளிடம் ஒருபோதும் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
சில பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்றவற்றை அவர்களாகவே விரும்பி வாங்கிக்கொடுக்கலாம். சிலர் கட்டிடம் கட்டிக்கொடுக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால், கட்டாயப்படுத்தி ஒருபோதும் நன்கொடை வாங்கக்கூடாது. பள்ளியில் சேரும் மாணவ- மாணவிகளிடம் கட்டாய நன்கொடை வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த அரசு பள்ளியிலாவது கட்டாய நன்கொடை கேட்டால் பெற்றோர்கள் அதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடமோ (சி.இ.ஓ.), மாவட்ட கல்வி அதிகாரிகளிடமோ (டி.இ.ஓ.) அல்லது சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கோ புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்தார்.