சவூதி அரேபியா சிறையில் 3 ஆண்டுகளாக துன்பப்பட்டு வரும் மூன்று தமிழக மீனவர்களை மீட்டு தரும்படி முதலமைச்சர் கருணாநிதிக்கு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களான மேரி டேவிட், சிமிஜான்சன், ஜெனிட் சில்வர் இருதயம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஜான்சன் டேவிட், ஜான்சன் அந்தோனி தாஸ் மற்றும் சில்வர் இருதயம் ஆகிய 3 பேரும் பத்து ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் அல்ஜீபைல் நாட்டில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு மூன்று பேரும் சவூதி அரேபிய கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஈரான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு பையை கொடுத்து கரையில் இருக்கும் உறவினரிடம் சேர்ப்பிக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் காவலர்கள் பையை பிடுங்கிக் கொண்டு எவ்விதம் காரணமும் கூறாமல் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முதலில் 5 ஆண்டுகள் வழங்கப்பட்ட சிறை தண்டனை பின்னர் 15 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அல்ஜீபைல் சிறையில் கடுமையான சித்ரவதைகளை மூன்று பேரும் அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழக முதல்வர் உடனடியாக மூன்று பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.