ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் உடன்பாடு! நெய்வேலி தொழிலாளர் வேலைநிறுத்தம் முடிந்தது!
செவ்வாய், 17 ஜூன் 2008 (16:00 IST)
13,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 16 நாட்களாக நடந்துவந்த நெய்வேலி நிலக்கரி ஒப்பந்தத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் ஒப்புக்கொண்டதையடுத்து வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக அகில இந்திய தொழிற்சங்க ஒன்றிய காங்கிரஸ் அமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் எம். சேகர் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது, ஊதிய உயர்வு ஆகிய இரண்டு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 13ஆம் தேதி மத்திய நிலக்கரித் துறை துணை அமைச்சர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினருக்கும், நிலக்கரி நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முன்னேற்றமும் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 13,000 பேரில் 5,000 பேர் தொழிலக கூட்டுறவு அமைப்பில் உறுப்பினராக அனுமதிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர் பணி நிரந்தரமாவதற்கு இதுவே முதல் படி என்பது குறிப்பிடத்தக்கது.
பணியிடங்கள் காலியாகும்போது இந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ள சேகர், ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியமும் ரூ.750.00 உயர்த்தவும், நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவ வசதிகள் அளிக்கவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்தின் தலைவர் பிரசன்ன குமார், பணியாளர் துறையின் இயக்குனர் பாபு ராவ், தொழிலாளர்கள் சார்பாக ஏ.ஐ.டி.யு.சி.யின் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதையடுத்து, பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியதினார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.