தொலைபே‌சி ஒட்டுக்கேட்பு: ராமதாஸ் புகா‌ர் க‌ற்பனை செ‌ய்‌தி! டி.ஜி.பி.

வெள்ளி, 13 ஜூன் 2008 (16:06 IST)
''அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் தொலைபே‌சி ஒ‌ட்டு‌ கே‌ட்க‌ப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான, ஆதாரமில்லாத கற்பனைச் செய்தியாகும்'' எ‌ன்று தமிழக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் கே.‌பி.ஜெயின் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேட்டி ஒன்றில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும் டி3டி என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் தொலைபேசி ஒட்டு கேட்டல்கள் நடை பெறுவதாகவும் கூறியுள்ளார்.தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள மற்றும் முக்கிய பிரமுகர்களின் தொலை பேசிகள் ஒட்டு கேட்கப்படுவதில்லை இது ஏற்கனவே தெளிவு பட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும், தேச நலனுக்கும் எதிராக செயல்படுபவர்கள் என்று சந்தேகப்படும் பயங்கர வாதிகள், தீவிரவாதிகள், அடிப்படை வாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் மட்டுமே மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள வரையறைகளின் படி கண்காணிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தொலை பேசிகளை ஒட்டு கேட்க வேண்டியதன் தேவையோ அவசியமோ இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்களோ, அரசியல் கட்சி தலைவர்களோ இது குறித்து அச்சமோ, ஐயமோ கொள்ளத் தேவை இல்லை.

மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கூறுவது போல டி3டி என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து ஒட்டு கேட்பதற்காக எந்த ஒரு சாதனத்தையும் தமிழக நுண்ணறிவு பிரிவு சார்பில் வாங்கப்படவில்லை. தனியார் நிறுவனத்தின் மூலம் தொலைபேசிகளை ஒட்டு கேட்டல் என்பது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி சாத்தியமும் இல்லை.

லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சில உரையாடல்கள் குறித்து விசாரணை செய்ய நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு விசாரணை ஆணைய‌ம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை பெற்ற பின்னர், மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான, ஆதாரமில்லாத கற்பனைச் செய்தியாகும் எ‌ன்று டி.ஜி.பி. ஜெயின் கூறியுள்ளார்.

டி.ஐ‌.ஜி.யு‌ம் ‌விள‌க்க‌ம்!

இதேபோ‌ல் காவல் துறை துணை தலைமை ஆ‌ய்வாள‌ர் (டி.ஐ.ஜி.) சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் பேட்டி ஒன்றில், எனது மனைவி மம்தா ஜிவால், டி3டி என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு இயக்குனராக இருப்ப தாகவும், இந்த நிறுவனம் மூலம் தொலைபேசி ஒட்டு கேட்டல்கள் நடை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது மற்றும் அவதூறான செய்தியும் ஆகும்.

இது போன்ற உண்மைக்கு மாறான தகவல்களை கூறுவதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று மரு‌த்துவ‌ர் ராமதாசை கேட்டுக்கொள்கிறேன். இனிமேலும் இது போன்ற அவதூறு பரப்பும் செயல்கள் தொடருமேயானால், அவதூறு பரப்புவோர்கள் மீதும், அதை வெளியிடும் பத்திரிக்கைகள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்