தெரு, சாலையில் பொதுக்கூட்டம் நடத்த கடும் கட்டுப்பாடு விதித்தது உயர் நீதிமன்றம்!
வெள்ளி, 13 ஜூன் 2008 (10:27 IST)
சென்னையில் உள்ள தெரு, சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த உயர் நீதிமன்றம் கடும் நிபந்தனையுடம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னை செனாய்நகர், கஜலட்சுமி காலனியை சேர்ந்தவர் அற்புதராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், புல்லாரெட்டி அவென்ï சாலையில் அவ்வப்போது அரசியல், மதம் மற்றும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டங்கள் சாலையை மறித்து நடத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அளித்த தீர்ப்பில், தெரு மற்றும் சாலைகளில் முழுவதுமாக போக்குவரத்து பாதிக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த சென்னை காவல்துறை ஆணையரோ, மாநகராட்சி ஆணையரோ அனுமதி வழங்க கூடாது. தெரு மற்றும் சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்தினால், பாதசாரிகள் நடந்து செல்லவும், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் செல்லவும் வழிவிட்டிருக்க வேண்டும்.
சாலை, தெருக்களில் தடையை ஏற்படுத்தி நடத்தப்படும் கூட்டங்களை 3 மணி நேரத்திற்கு மேல் நடத்த அனுமதிக்க கூடாது. அலுவலக நேரங்களில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது. ஒலி கட்டுப்பாடு விதிமுறைபடி அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. எக்காரணத்தை முன்னிட்டும் இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது.
கூட்டம் முடிந்ததுமே சாலை, தெருக்களில் அமைக்கப்பட்ட மேடை போன்ற இதர தடுப்புகளை உடனடியாக பிரித்து எடுக்கவேண்டும். கூட்டம் நடத்துவதற்கு முன்பிருந்த நிலையை போல் மீண்டும் உருவாக்க வேண்டும். கூட்டம் நடத்தும் இடத்தில் (குழி தோண்டுதல்) ஏதாவது சேதாரத்தை ஏற்படுத்தினால், அதற்கான தொகையை கூட்டம் நடத்துபவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். இதற்காக கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்போது டெபாசிட் தொகையை வசூலிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.