கடல்வழி தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்க கடல்சார் காவல்நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளை உடனடியாக விரைந்து அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஊடுருவல் அதிகரித்துக் கொண்டே வருவதுடன் ஆர்டிஎக்ஸ் உட்பட வெடிபொருட்களும், நவீன ஆயுதங் களும் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், எல்.டி.டி.ஈ மற்றும் அல்குவைதா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மூலம் தமிழ்நாட்டின் கடல் வழியாக தீவிரவாத அச்சுறுத்தலை இந்தியா சந்தித்துக் கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும், பாதுகாப்பு வல்லுனர்களும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
மேற்படி பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்களை தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் கடலோரப் பாதுகாப்புத்திட்டம் என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் கடல்சார் காவல் நிலையங்களையும், சோதனைச் சாவடிகளையும் திமுக அரசு அமைக்காததுதான்.
மேற்படி மத்திய அரசு திட்டத்தின்படி மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்து கடல்சார் காவல்நிலையங்களையும் அமைத்துள்ளன. ஆனால், இத்திட்டத்தின் கீழ் 12 கடல்சார் காவல்நிலையங்கள் அமைக்கப் படவேண்டிய தமிழ்நாட்டில் இதுவரை ஒன்று கூட அமைக்கப்படாதது வேதனைக்குரிய விஷயமாகும்.
கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் அல்குவைதா பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றின் மூலமாக கடல்வழியாக புதிய தீவிரவாத அச்சுறுத்தலை தற்போது தமிழகம் எதிர்கொண்டிருப்பதாக தி.மு.க இடம்பெற்றுள்ள மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு பிறகாவது கடல்சார் காவல்நிலையங்களையும், சோதனைச் சாவடிகளையும் உடனடியாக அமைத்து தமிழர்களின் பாதுகாப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமளிக்கதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.