பொறியியல் கல்விக் கட்டணம் : ராமதாசுக்கு கருணாநிதி பதில்!
சனி, 7 ஜூன் 2008 (15:42 IST)
சுயநிதிப் பொறியியல் கல்லூரிக் கட்டணங்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இரண்டுக்கும் சேர்த்து ரூ.32,500 கட்டணம் இருந்தது, இதை இந்த ஆண்டு தமிழக அரசு ரூ.62,500 ஆக அதிகரித்துள்ளது என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
இது குறித்து கருணாநிதி அளித்துள்ள பதிலில், "இது உண்மைக்கு மாறான ஒன்று, அரசு ஒதுக்கீடு செய்யும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.32,500 என்பது அப்படியேதான் உள்ளது, கடந்த 5 ஆண்டுகளாக இதே கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது, அதில் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. அரசு ஒதுக்கீடு 65 விழுக்காடு மாணவர்கள். எனவே மொத்த மாணவர்களில் அரசு ஒதுக்கீடு செய்கின்ற 65 சதவீத மாணவர்களுக்கு எந்த விதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.
மேலும், இந்த மாணவர்கள் அந்தக் கல்லூரிகளுக்கு சென்று பணம் கட்டும்போது அதிகத் தொகையை கட்டுமாறு வலியுறுத்தப்படக்கூடும் என்பதால், அதனை தவிர்ப்பதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தில் அந்த பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேரலாம் என்று இந்த ஆண்டு முதல் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் அந்த அறிக்கையில் கூறும்போது, "கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடான 35 விழுகாடு மாணவர்களுக்கு தற்போது ரூ.62,500 கட்டணம் என்று நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு பரிந்துரை செய்துள்ளது. அது கடந்த ஆண்டு ரூ.32,500 ஆக இருந்தது. இப்போது உயர்த்தி விட்டார்கள் என்று அறிக்கை விட்டுள்ள அனைவரும் சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.32,500 என்று பெயர் அளவில், பேப்பர் அளவில் இருந்ததே தவிர, பல சுய நிதிக் கல்லூரிகளில் அந்தக் கட்டணத்திற்கு மாணவர்களை அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
எனவே கடந்த ஆண்டு ரூ.32,500 மட்டுமே கட்டினார்கள் என்பது உண்மையல்ல, ரசீது மட்டும் இந்தத் தொகைக்கு வழங்கப்பட்டு, மீதித் தொகை ரசீது இல்லாமல் வசூலிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.
இதன் மீது நடவடிக்கைகளில் துறை ஈடுபட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.
எனவே இந்த அரசைப் பொறுத்தவரை எந்த விதமான விருப்பு வெறுப்புமின்றி மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, சுய நிதி கல்லூரிகளின் நிர்வாகிகள் அமைப்பும், தாங்கள் விடுத்துள்ள அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு - இந்த அரசின் குறிக்கோள் கல்வி வியாபாரமாக ஆகி விடக்கூடாது என்பது தான் என்பதை மனதிலே கொண்டு - மாணவர்களின் ஒட்டு மொத்த கல்வி வளர்ச்சி கருதி இந்த அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டு மென்று அனைவரையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.