அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை – விஜயகாந்த் குற்றச்சாற்று!
திங்கள், 2 ஜூன் 2008 (12:26 IST)
தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்சனையை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை என தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
webdunia photo
WD
ஈரோட்டில் ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயகாந்த் பேசுகையில், உழவன் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே மற்றவர்கள் சோற்றில் கை வைக்கமுடியும். இப்படி முக்கியதுவம் பெற்ற விவசாயிகளின் வாழ்க்கை இன்று இருளில் உள்ளது.
விவசாயத்திற்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு இல்லை. ஏழை மக்கள் இன்று குடும்ப அட்டை வாங்குவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என இங்கு தாய்மார்கள் குற்றம்சாட்டுகின்றனர். விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறி செல்கிறது. இதை மத்திய நிதி அமைச்சரே ஒத்துக்கொள்கிறார். இதற்கு என்ன தீர்வு காணப்போகிறார்கள் என்பதற்கு விளக்கம் இல்லை.
தமிழகத்தில் மின்சார தடை காரணமாக அனைத்து தொழில்களும் வீழ்ந்துள்ளது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றால் ஒன்றும் இல்லை.
இங்கு பலர் வண்ண தொலைக்காட்சி கிடைக்கவில்லை, எரிவாயு அடுப்பு கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். அவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். தற்போது தி.மு.க.வில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கவேண்டும் என கூறிவருகின்றனர். நீங்கள் ஒவ்வொறுவரும் ரூ.5 செலுத்தி தி.மு.க. உறுப்பினர் அட்டையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை காட்டினால் உடனே உங்களுக்கு இவை அனைத்தும் கிடைத்துவிடும். ஓட்டு மட்டும் நம் கட்சிக்கு போட்டுவிடுங்கள். இது தவறில்லை.
ரேசன் கடையில் அரிசியுடன் சோப்பு வாங்க சொல்கிறார்கள். இது என்ன நியாயம். இதையெல்லாம் தட்டிக்கேட்டால் விஜயகாந்த் கெட்டவன். எனக்கு கூட்டணி தேவையில்லை. எம்.ஜி.ஆரை எந்த கூட்டணி வைத்து கருணாநிதியை ஜெயிக்க முடிந்தது. நான் ஆண்டவனையும், மக்களையும் நம்பி உள்ளேன். ஆண்டன் மக்கள் ரூபத்ததில் எனக்கு காட்சியளிக்கிறான்.
ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாளும் நமதே நாற்பதும் நமதே என கூறிவருகிறேன். நான் ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக ரேசன் பொருட்களை வீடு தேடி கொண்டு வந்து காட்டுவேன். இதன்மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பல்வேறு திட்டம் என்னிடம் உள்ளது. ஆகவே வரும் தேர்தலில் தே.மு.தி.க.விற்கு வாக்களியுங்கள் என்றார்.