ஒகேனக்கல் திட்டம் : கர்நாடகா ஆட்சேபிக்க முடியாது - இல. கணேசன்!

சனி, 31 மே 2008 (14:32 IST)
கர்நாடக தலைவர்கள் சிலர் சொல்வது போல ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்குச் சொந்தமானது என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகம் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்!

இப்பிரச்சனை குறித்து இன்று இல. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

காவிரிப் பிரச்சனை, ஒகேனக்கல் யாருக்கு சொந்தம், கூட்டு குடிநீர் திட்டம் ஆ‌கியன ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளதாக தோன்றுகின்ற மூன்று விஷயங்கள். ஆனால் 3 விஷயங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை.

காவிரி பிரச்சனை என்பது நீண்ட காலமாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே உள்ள பிரச்சனை. இடைக்கால தீர்ப்பையும் ஏற்காமல் இறுதி தீர்ப்பையும் ஏற்காமல் ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு உச்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதன் தீர்ப்பு வந்த பிறகுதான் கர்நாடகம் தமிழகத்துக்கு எ‌வ்வளவு தண்ணீர் திறந்துவிட முடியும் என்பது தெரியும்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஏதோ கர்நாடக அரசு மனமுவந்து திறந்துவிட்ட தண்ணீர் அல்ல. தங்களால் தடுக்க இயலாமல் வேறு வழியின்றி வழிந்தோடிய தண்ணீர்தான், கர்நாடகத்தில் ஆள்பவர்கள் தயவால் வந்ததல்ல, ஆண்டவனதயவால் வந்தது.

எந்த அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விடும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். எத்தனை அளவு தண்ணீர் திறந்துவிட்டாலும் பூஜ்புள்ளி (Zero Point) என அழைக்கப்படும் பகுதிவரை ஓடிவரும் காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம்.

பூஜ்ய புள்ளிக்கு கீழே வரும் ஒவ்வொரு துளியும் தமிழகத்துக்கு சொந்தம். பில்லிகுண்டுலு‌வில் உள்ள பூஜ்ய புள்ளியிலிருந்து 7 கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள காவிரியிலிருந்து நாம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுப்பதை கர்நாடகம் எப்படி ஆட்சேபணை செய்யமுடியும்.

ஆனாலும் கூட நாம் எங்கிருந்து தண்ணீர் எடுக்கிறோமோ அந்த பகுதியில் காவிரியின் ஒரு கரை தமிழகத்திலும், எதிர்கரை கர்நாடகத்திலும் உள்ளது.

கர்நாடகத்தின் அக்கரை பற்றி நமக்கு அக்கறை இல்லை. ஆனாலும்கூட நமது கூட்டு குடிநீர் திட்டத்தால் கர்நாடகத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு ஒரு குவளை தண்ணீராவது பாதிப்பு ஏற்படுமஎன கர்நாடக அரசால் நிரூபிக்க முடியுமா?

பிரச்சனை ஒகேனக்கல், தொங்கு பாலத்தை கடந்து பாறைகளாக உள்ள ஒரு பகுதியை எவரோ தவறாக கர்நாடகத்துக்கு சொந்தம் எனச் சொல்லி சில தலைவர்களையும் நம்ப வைத்துள்ளார்கள். அது பிரச்சனையாகி வருகிறது. எத்தகைய நில அளவை கையாண்டாலும் நமக்கு எதிர்ப்பு இல்லை.

ஆனால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில எல்லைகளை விண்வெளி கலம் புகை‌ப்பட‌ம் மூல‌ம் நமக்கு தந்து கொண்டிருக்கிறது. அது சுலபமாக நமது கையடக்க தொலைபேசியில் காணக் கிடைக்கின்றன.

ஜி.பி.எஸ். மூலமாக அதை அந்தப் பாறைப் பகுதியில் நின்று கொண்டு பார்த்தாலே அந்தப் பகுதி கர்நாடக எல்லையிலிருந்து 1கி.மீ. தொலைவு உள்ளே உள்ளது என்பது தெளிவாக தெரியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இதற்கு மற்றொரு நிலஅளவை தேவையில்லை.

ஒரு வேளை ஒகேனக்கல் கூட்டு‌க் குடிநீர் திட்டம் என்கின்ற பெயர் குழப்பம் உண்டாக்கியிருந்தால் அதை தர்மபுரி கூட்டு‌க் குடிநீர் திட்டம் என்றோ பெண்ணாகரம் திட்டம் என்றோ அல்லது கூட்டப்பாடி திட்டம் என்றோ மாற்றி அமைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்