சோழவந்தானில் 5 செ.மீ. மழை!
திங்கள், 26 மே 2008 (16:16 IST)
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவந்தானில் 5 செ.மீட்டர் மழை பெய்தது. மணப்பாறை, நன்னிலம், கரூர், பரமத்தி, திருப்பத்தூர், திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவாரூரில் 2 செ.மீட்டர் மழை பெய்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தமிழகம், புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையொட்டியே இருக்கும். மாலையோ அல்லது இரவோ மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.