ஓசூர் அருகே விஷசாராயம் குடித்து 3 பெண்கள் உள்பட 8 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பின்னமங்கலம், தேவகானப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதிக்கு வேலைக்கு சென்றனர். அவர்கள் கர்நாடக மாநில பகுதியில் சோலூர் என்ற கிராமத்தில் விற்ற சாராயத்தை குடித்துவிட்டு ஊருக்கு திரும்பினார்கள். இரவு வீட்டில் படுத்து தூங்கினார்கள்.
இன்று காலை தேவகானப்பள்ளியை சேர்ந்த மகமூத் (50), பின்னமங்கலத்தை சேர்ந்த நாராயணன் (40), ஆஞ்சினம்மாள் (48), சின்னப்பா (55), கிருஷ்ணப்பா (68), சின்ன முனியம்மாள் (50), அடவிசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் (65), தேவகானபள்ளியை சேர்ந்த மாதப்பா (60) ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர்.
மயங்கிக் கிடந்த பின்னமங்கலத்தை சேர்ந்த முனிராஜ் (32), இளையசந்திரத்தை சேர்ந்த முனுசாமி (45) ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.