தா. கிருட்டிணன் கொலை வழக்கு: அழகிரி உள்பட 13 பேர் விடுதலை!
வியாழன், 8 மே 2008 (18:59 IST)
தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்பட 13 பேரை விடுதலை செய்து சித்தூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கடந்த 2003ஆம் ஆண்டு மதுரையில் கொலை செய்யப்பட்டார். தனது இல்லத்திற்கு அருகே காலை வேளையில் நடை பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் முதல் சித்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
சாட்சிகள் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கடந்த 5ஆம் தேதியுடன் விசாரணை முடிந்தது. இதையடுத்து இவ்வழக்கில் மே 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி துர்கா பிரசாத் அறிவித்தார்.
இன்று மாலை 4.30 மணிக்கு நீதிபதி துர்கா பிரசாத் தீர்ப்பளித்தார். அதில், மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் உள்பட குற்றம்சாற்றப்பட்ட 13 பேருக்கு எதிரான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகக் கூறி அனைவரையும் நீதிபதி விடுதலை செய்தார்.